கேள்வித்தாள் வெளியான விவகாரத்தால், ரத்து செய்யப்பட்ட, குரூப் 2 தேர்வு
இன்று மீண்டும் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வின்
முடிவுகள் ஒன்றரை மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம்
அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த சார்நிலை பணியில் சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், இளநிலை
வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இளநிலை
கூட்டுறவு தணிக்கையாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 3 ஆயிரத்து 631
பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜுன்
13-ந் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி குரூப் 2
தேர்வு நடைபெற்றது. இதில், ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில்
முன்கூட்டியே வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த
தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, குரூப் – 2க்கான மறுதேர்வு இன்று நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 245 மையங்களில் 6 லட்சத்து 41 ஆயிரத்து 209
பேர் இந்த தேர்வை எழுதினர். பல மாவட்டங்களில் தேர்வுக்கு
விண்ணப்பித்தவர்களில் ஏராளமானோர் தேர்வு எழுத வரவில்லை. இதனால்,
பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன.தேர்வு மையங்களை மாவட்ட
ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
-தேனி ராஜா