தேனியில், பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற, போலி பெண் டாக்டர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.தேனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. 10ம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து, பின்னர் ஐஸ்வர்யா என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இவர், இரண்டு நாட்களுக்கு முன், ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு அதன் தாய் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த குழந்தையை பிரசவம் பார்த்த ராஜலட்சுமி, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு விற்பதற்காக, 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை பேசியதாக தெரிகிறது.
இந்த தகவல் அறிந்த காவல்துறையினர், ராஜலட்சுமி மற்றும் அவரது உதவியாளர் அண்ணமயில் ஆகியோரை கைது செய்து, பெண் குழந்தையை மீட்டனர். இந்த குழந்தை, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்படும் என்று தேனி காவல் துறை ஆய்வாளர் கோபி தெரிவித்தார்.
மாவட்ட செய்தியாளர் - தேனி ராஜா