Color Socrling

தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9941681652e-mail : info@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9941681652 e-mail : info@thagavalthalam.com

வெதை நெல்லு வச்சுக்கனுங்கற பழக்கத்தையும் விட்டுட்டு போயிருக்காங்க    “வித்தவர லாபம்னு நெனைக்கிறவனும், வெதை நெல்ல வேகவச்சு தின்னவனும் வெளங்க மாட்டான்னு சொல்லுவாங்க. தலையே போனாலும் வெதை நெல்லுல மட்டும் கை வைக்கக் கூடாது அதுதான் நம்ம உசுரு. நம்ம பாட்டன், முப்பாட்டனெல்லாம் நம்மள மட்டும் விட்டுட்டு போகல. வழி வழியா நம்ம வெள்ளாம செய்ற நெல்லுலதான் வெதை நெல்லு வச்சுக்கனுங்கற பழக்கத்தையும் விட்டுட்டு போயிருக்காங்க.” அப்புடின்னு எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவாரு. வெதை நெல்லுக்கு அப்படி ஒரு தன்மானமும், பாரம்பரியமும் உண்டு.

    கிராமத்துல ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டா அவளுக்கு பொட்டு வச்சு, பூ வச்சு, சடங்கு செஞ்சு, ஓல குடிசையில ஒக்கார வச்சு அவளுக்கு மொதல்ல தருவது கீரை விதை போட்ட பாலும், பழமும். அந்த வெதை மாதிரி இந்த பொண்ணும் பெத்துப் பெருவனும்னு சொல்லுவாங்க.

    வாழையடி வாழையா தன் குலம் தலைக்கணுங்கற சந்தோசத்துல, ஒரு பிள்ளைத்தாச்சியோட கருவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அத பாதுகாத்து கண்ணும் கருத்துமா பாத்துக்குறானோ, அந்த அளவு முக்கியத்துவம் இந்த வெதை நெல்லுக்கு கொடுப்பாங்க விவசாயி. வெதை நெல்ல உருவாக்க, அத பாதுகாக்க அவன் எப்படி எல்லாம் பாடுபட்டான்னு பாருங்க.

   சித்திரையில நல்ல நாள் பாத்து நல்லேறு கட்டி, வயல்ல வேலைய தொடங்குவாங்க. வைகாசியில கோடை மழை ஒரு நாள் பெஞ்சா வயல நல்லா வரவு ஓட்டு ஓட்டிப் போடுவாங்க (சும்மா சாகுபடி இல்லாம உழுது போடறது) மண்னு காஞ்சு போய் அதுல உள்ள புல்லு கொஞ்சம் செத்து போகும்.

   ஆவணி மாதம் நடவு வேலை ஆரம்பிக்கும். பயிர் வளர ஆரம்பிச்ச ரெண்டு மாசத்துக்கு பிறகு, எந்த வயல்ல பயிர் செழிப்பா வருதுன்னு பாத்து, வெதை நெல்லுக்காக அந்த பயிருக்கு மட்டும் செல்வாக்கு செலுத்தி கவனிப்பாங்க. அதுக்கு மட்டும் ஒரு மொறைக்கு நாலுமுறை களையெடுப்பாங்க. ரசாயன ஒரம் எதுவும் போட மாட்டாங்க. பயிரு வளர்ந்து அங்கொன்னும் இங்கொன்னுமா கதுரு வர ஆரம்பிக்கும்.

   என்னதான் நம்ம பாத்து பாத்து களையெடுத்தாலும் மொதல்ல குதுரவாளி வந்து தலையெ நீட்டிட்டு நிக்கும். அதப் புடுங்கி போட்டா? வேற இனத்து கலப்பு நெல்லு வந்து நானும் வந்துருக்கேன்ல இப்ப என்னா பண்ணுவேன்னு கேக்கும். கலப்பு நெல்லு கலந்துராம ஒரே ரகமா பாத்துக்கணுங்க. பச்சப்புள்ளைய பாத்துக்கற கணக்கா கண்ணும் கருத்துமா பாத்துக்கணுங்க.

   கார்த்திகை, தை மாதத்துல அறுவடை நாளும் வந்துரும். கதுரறுத்து அடிக்கும் போது, கருக்கா கலந்துரும்னு (பதரு நெல்) ரெண்டு கோட்டுக்கு (கையால கதிர் அடிக்கும் முறையை கோட்டு என்பார்கள்) மேல அடிக்க மாட்டாங்க. வேற ரக நெல்லு அடிக்கிற களத்துலயும் வெதை நெல்லு அடிக்க மாட்டாங்க. முதல் போக வெள்ளாமையில வெளஞ்ச நெல்லத்தான், வெதை நெல்லாப் பயன்படுத்துவாங்க.

   கருக்கா இல்லாம தூத்தி, கல்லு மண்ணு இல்லாம, சுத்தம் செஞ்சு, ஒண்ணுக்கு நாலு தடவ காய வச்சு, பூச்சியடிக்காம வேப்பந்தளையெல்லாம் போட்டு, ஒரு தடவக்கி நாலுதடவ காய வச்சு, பானையிலயோ, குதிர்லயோ, பத்தாயத்துலயோ, அவரவர் தேவைக்கு ரெடி பண்ணி, அடுத்த போக வெள்ளாமைக்கு வெதை நெல்லு வச்சுருப்பாங்க.

    சிவராத்திரி அன்னைக்குதான் மொத மொதலா சேமிப்பு பாத்திரத்துல போட்டு வைப்பாங்க. சிவன் பாதுகாப்பார்ன்னு நம்பிக்கை. அப்புடி வச்சுருக்குற வெதை நெல்ல மாசத்துல ஒரு தடவ அம்மாவாசை அண்னைக்கு பாத்துதான் காய வப்பாங்க. அப்பதான் பூச்சி புடிக்காதுன்னு நம்புவாங்க. இப்படி பக்குவப்படுத்தி வச்சுருக்குற வெதை நெல்லதான், விதையா பயன்படுத்துவாங்க.

   விதையா பயன்படுத்துறதுக்கு முன்னாடி சோதன செஞ்சு பாப்பாங்க. ஒரு கைப்பிடி வெதை நெல்ல அள்ளி ஊறவச்சு, ஒரு துணியில முடிச்சுவச்சு ரெண்டு நாள் களிச்சு தொறந்து பாத்தா மொளச்சுருக்கும். இது நல்ல வெதைதான் என்ற முடிவுக்கு வந்துருவாங்க.

   இந்த வெதை நெல்லு உற்பத்தி மாதிரியேதான் மத்த எள்ளு, உளுந்து, கடல, பயிறு, கம்புன்னு எல்லா விதமான வெதைகளையும் தன் நெலத்துல வெளஞ்ச வெள்ளாமையில இருந்துதான் உற்பத்தி பண்ணினாங்க விவசாயிங்க. வெதை நெல்ல காசுக்கு வாங்கினா கௌரவ கொறச்சலா நெனப்பாங்க கிராமத்துல. வெதை நெல்லு இல்லாதவங்ககிட்ட சாப்பாட்டு நெல்ல வாங்கிட்டு, வெதை நெல்ல கொடுப்பாங்க.

   இப்ப வெதை நெல்லு வச்சுக்குற பழக்கமே இல்லாம போச்சு. நாம செய்யற வெள்ளாமையிலேயே நமக்கான வெதைய எடுத்துக்குற எண்ணமே விவசாயிடம் இல்ல. எல்லா விதையையும் வெல கொடுத்துத்தான் வாங்கறாங்க.

   கதிரருக்கும் எந்திரம் வந்த பிறகு கையினால அறுக்குற பழக்கம் கொறைய ஆரம்பிச்சிருச்சு. பணக்காரங்க அவங்க வயலுக்கு எந்திரம் கொண்டுவந்தா பக்கத்து வயக்காரனும் அறுவடை செய்யனும். கொஞ்ச நெலத்துக்கெல்லாம் எந்திரம் கொண்டு வர வரமாட்டாங்க. ஆள் பற்றாக்குறையின் காரணமாகவும் பாலும் பச்சையுமா அறுக்க வேண்டிய நெலம வந்துச்சு. முழுசா தேறி வெளையாத நெல்லு மொளைப்பு தெறனில்லாம போச்சு. வெதை நெல்லு வைக்கிற பழக்கம் கொஞ்ச கொஞ்சமா நம்ம விட்டு போச்சு.

     நிறுவனங்களுக்கு விதை உற்பத்தி கையேடு
இதை பயன்படுத்திக்கிட்டு வேளாண்மை துறை உதவியோடும், விவசாய பண்ணை மூலமாகவும் வெளிச் சந்தை வெதை நெல்லு உள்ள வர ஆரம்பித்தது. அரசே அதை சந்தைப்படுத்தி மொதலாளிகளுக்கு லாபத்தை ஈட்டித்தரும் எண்ணத்தோடு விளம்பரம் செய்தது. “எந்த நெல்லு மொளைக்கும் திறன் இருக்குங்கறதையும், எந்த ரக நெல்லை போட்டா நல்லா வெளச்சல் வருங்கறதையும் பரிசோதனை மூலமா கண்டுபிடிச்சு நாங்க சொல்றோம். உங்க வெதை நெல்ல எடுத்துக்கிட்டு எங்க ஆபீசுக்கு வாங்க” என்று வேளாண்மை துறையே ஊருக்கு ஊர் குறும்படம் போட்டு சொல்ல ஆரம்பிச்சாங்க.

    ஆபீசரு சொன்னாதான் அது நல்ல நெல்லுங்கற எண்ணம் எல்லாரிடமும் பரவலா தோன்ற ஆரம்பித்தது. முதல் கட்டமா வெதை நெல்ல மானியமாக கொடுத்தாங்க. பிறகு மானியம் போயி அவங்க சொல்ற ஒரத்த வாங்கினா வெதை நெல்லு மானியம்னாங்க. இப்ப வெதையும், ஒரமும், அதிக தொகையானாலும, போட்டே ஆக வேண்டிய கட்டாயமாச்சு. ஊருக்குள்ள உள்ள பணக்கார விவசாயிங்க மானியத்துக்கு ஆசப்பட்டு ஆபீசு வெதை நெல்ல பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. ஊருல பாதிக்கு மேல பணக்காரங்க வயலா இருக்கும் போது. அவங்க ஆபீசரு சொல்ற நெல்ல நடும்போது நாம மட்டும் தனியா வேற நெல்ல நடமுடியாது.

    பசுமைப் புரட்சிங்குற பேருல புது விதை, ஊரம், பூச்சி மருந்துன்னு விவசாயிக்கு செலவுதான் அதிகமாச்சு. இலாபமும் இல்லை. மண்ணும் மருந்த குடிச்சு குடிச்சு சக்தியை இழந்துகிட்டு வருது. விளையிற அரிசியும் மக்களோட உடல்நலத்தை பதம் பாக்காம விடுறதில்ல.

     காலப் போக்குல வெதை நெல்லு வைக்கிற பழக்கமே இல்லாம போச்சு. வெதை நெல்ல வைக்கிறது பாரம்பர்யமா நெனச்சது போயி ஆபீசு நெல்லு வாங்கறது கௌரவமா மாறி போச்சு. விவசாயி வீட்டுல எங்கன தடிக்கி விழுந்தாலும் நெல்லா இருக்கும். இப்பல்லாம் வீட்ல ஒரு பிடி நெல்லுகூட வைக்கிறதுல்ல.

    ஒரு விவசாயி வீட்டுல நெல்லுதான் எல்லாத்துக்குமான கஜானாவா இருக்கும். எப்பையும் நெல்லு வீட்டுல இருந்துகிட்டேதான் இருக்கும். கையில காசு இல்லாதப் போது தேவைக்கு ஏற்றவாறு கொஞ்ச நெல்ல கடைக்கு போடுவாங்க. இன்னைக்குக் கொழம்புக்கு காய் இல்லையா ஒரு மரக்கா நெல்ல போட்டுட்டு கொழம்பு காச்ச ஏதாவது வாங்கிட்டு வா அப்டின்னுவாங்க. பிச்ச எடுக்க வர்ரவங்க முதல் கொண்டு, துக்கம் சொல்லி வர்ரவங்க வரை எல்லாத்துக்கும் நெல்லுதான் கொடுப்பாங்க.

    வாழையடி வாழையா தளச்சு நிக்கணுன்னு பாதுகாத்து வந்த வெதை நெல்லு இப்ப மண்ணோட சேந்து மலடா போச்சே!

- வேணி

 -பசுமை நாயகன்