சமுதாயச் சிற்பிகள் என்னும் பகுதியின் மூலமாக, சமூகத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கும் தனி நபர்கள் சிலரை, கடந்த சில வாரங்களாக "புதிய தலைமுறை" அடையாளம் காட்டி வருகிறது . ஆனால் இந்த முறை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரையும் சமுதாயச் சிற்பிகள் என்று "புதிய தலைமுறை" அடையாளப்படுத்துகிறது .
வகுப்பு நேரத்தில் படிப்பும், பிற நேரத்தில் விளையாட்டும் என எல்லா குழந்தைகளையும் போல இயல்பாக இருக்கும் இந்த மாணவர்கள், சமுதாயத்தின் சிற்பிகள் என அழைக்கப்படுவது ஏன் என சற்று சிந்தித்தால் அழகான பதில் மற்றும் பலன் தெரியும்.
உலகம் சந்தித்து வரும் சுற்றுச் சூழல் சவாலில் இருந்து பூமியை, மரங்கள் என்ற சக்தியை தவிர வேறு யாராலும் காப்பாற்ற முடியாது என்பது குழந்தைகள் மனதில் வேரூன்றியுள்ள எண்ணம். இதனைப் போக்குவதற்கு சென்னை நுங்கம்பாக்கம் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் வீடுகளில் தேவையற்றதாக தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் கவர்களில் மண் அடைத்து, விதைகள் தூவி செடிகளையும், மரக்கன்றுகளையும் வளர்த்து வருகின்றனர்.
எந்த விதை மரமாகும் என்ற ஆய்வுகளெல்லாம் இந்த மாணவர்கள் நடத்துவது இல்லை. ஆனால் பழக்கடைகளிலிருந்து அழுகிய மற்றும் உபயோகமற்று போகும் பழங்களை கொட்டி, அதில் மண்ணை பரப்பி தண்ணீர் தெளித்து இயற்கை வேளாண்மை செய்கின்றனர். நிழலோடு, பழங்கள் தரும் மரங்களை வளர்ப்பதால் விளையப்போகும் நன்மை இந்த மாணவர்கள் முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தங்களுக்கும், தங்களுக்கு பின்னால் வரப்போகும் தலைமுறைக்கும் இவர்கள் அளிக்கும் கொடை பாராட்டுதலுக்குறியது.
மரம் வளர்ப்பு என்ற விஷயத்தை இத்துனை ஆழமாக இவர்கள் மனதில் விதைத்தது, ஒரு தனியார் கல்லூரி பேராசிரியர். உணவில் பற்றாக்குறை ஏற்படும்போது, பழங்களைக் கொண்டு பற்றாக்குறையை ஈடு செய்யலாம் என்பது அவரது கருத்து.
இளம் வயதில் சமுதாய சிந்தனையோடு வளரும் குழந்தைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே சிந்தனையை கொண்டு செயல்படுவது ஆச்சர்யம் தான். பலனை எதிர்பாராமல் இவ்வளவு தீவிரமாக மரங்களை காக்கும் இந்த மாணவர்கள் அனைவரும் சமுதாயச் சிற்பிகள் ஆவர்