டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் மட்டுமல்ல, மகாராஷ்ட்ரா, ஒதிஷா, டெல்லி என
பல மாநிலங்களிலும் பரவி, உயிர்களை பலி வாங்கிக்கொண்டுள்ளது. ஆபத்தான
இக்காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை ஒழிப்பதன் பின்னணியில் மிகப்பெரிய
வர்த்தக சாம்ராஜ்யமே நடந்துகொண்டுள்ளது. சின்னஞ்சிறிய உயிரினமான கொசு, மனித
உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சுவதை இங்கு பார்க்க முடிகிறது.
இந்த சிறு உயிரினம் உலகெங்கும் ஓராண்டில் பலி வாங்கும் உயிர்களின்
எண்ணிக்கை சுமார் 20 லட்சம் என்கிறது WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு.
உலகிலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் கொசுதான் என்று அடித்துக் கூறுகின்றன,
சில மருத்துவ அமைப்புகள். டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்ளிட்ட
எண்ணிலடங்காத வியாதிகளுக்கு கொசுவே காரணமாக உள்ளது. கொசுவின்
தொல்லையிலிருந்து தப்புவதற்கு, உலக அளவில் மிகப்பெரிய வர்த்தகமே நடந்து
கொண்டுள்ளது ஆச்சரியமான செய்தி.
இந்தியாவில் மட்டுமே, கொசு விரட்டும் பல்வேறு தயாரிப்புகளின் சந்தை
மதிப்பு ஆயிரத்து 600 கோடி ரூபாய் என்கிறது இன்னும் ஒரு ஆய்வு.
ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோத்ரெஜ், bayer உள்ளிட்ட 54 நிறுவனங்கள், இன்று
75 பிராண்ட் பெயர்களில் கொசு விரட்டிகளை விற்று வருகின்றன. சுருள்கள்,
வேப்பொரைசர் எனப்படும் திரவ புட்டிகள், Creamகள் என பல விதங்களில் கொசு
விரட்டிகள் தற்போது கிடைக்கின்றன. இது தவிர மின் அதிர்வுகளால், கொசுக்களை
கொல்லும் batகள் உள்ளிட்ட நவீன தொழில் நுட்ப தயாரிப்புகளுக்கும் சந்தையில்
பஞ்சமில்லை.
தற்போது நாடு முழுக்க நிலவும் மின்வெட்டு பிரச்னையை ஒட்டியும்,
இத்துறையில் புதுமைகள் நடந்து வருகின்றன. மின்சாரம் இல்லாத நிலையிலும்
செயல்படும், புதுவிதமான கொசுவிரட்டிகள் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன.இந்த
வகையான கொசு விரட்டிகளுக்கு கொடுரமான மறுபக்கமும் உள்ளது என்பவர்கள் உண்டு.
இரசாயன கொசுவிரட்டிகளில் உள்ள அல்லத்ரின் என்ற வேதிப்பொருள் மனிதனின்
நுரையீரல், நரம்புகள் உள்ளிட்டவற்றை சிறுகச் சிறுக பாதிக்கும் என்று
மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
டெங்கு, மலேரியா போன்ற வியாதிகளில் இருந்து தப்ப பயன்படுத்தப்படும் கொசு
விரட்டிகள், புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகளை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக
சொல்லப்படுவது கவலைக்குரியதே. இந்நிலையில், ரசாயனங்கள் இல்லாமல் மூலிகைகள்,
வேம்பு உள்ளிட்டவற்றை கொண்டு, இயற்கை முறையிலான கொசு விரட்டிகள்
தயாரிப்புகளும் களைகட்ட தொடங்கியுள்ளன. எத்தனை விதமான கொசு விரட்டிகள்
வந்தாலும், கொசு வலைகளுக்கு இருக்கும் வரவேற்பே தனிதான். குறைந்த விலை,
நிறைந்த பாதுகாப்பு என்பது இதன் சாதகமான அம்சம்.. கொசு வலை தயாரிப்பில்,
தமிழக நகரமான கரூர், அகில இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது.
இங்கிருந்து மட்டும் 300 கோடி ரூபாய் மதிப்புக்கு கொசு வலைகள்
ஏற்றுமதியாகின்றன. எத்தனையோ சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட மனித குலம்
இந்த சின்னஞ்சிறிய கொசுக்களை ஒழிக்க படும் பாட்டை ஒரு விந்தையாகவே பார்க்க
வேண்டியுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வரும் முன் காப்போம் என்ற
வழியே சிறந்தது. அதாவது, கொசுக்களை அதன் உற்பத்தி நிலையிலேயே தடுப்பதுதான்
சிறந்ததாக இருக்கும்.
தேனி.K.ராஜா & A.P.சரவணன்
தேனி.K.ராஜா & A.P.சரவணன்