வெயில் காலம் என்றாலே நம் நினைவுக்கு வரும் எத்தனையோ விஷயங்களில் தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட ஓலைகளும் ஒன்று. வழக்கமாக, கோடை காலம் வந்தாலே சூடு பிடிக்கும் இந்தத் தொழில் அண்மைக் காலமாக மிகவும் நலிவடைந்து வருகிறது.
வெயிலின் தாக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி ஒரு குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்துவதில் தென்னங் கீற்றுகளின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தத் தென்னங்கீற்றுகளைத் தயாரிக்கும் தொழில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் பிரதானமாக நடைபெற்று வருகிறது.
தேவைகள் குறையும் சூழல்:
சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் தென்னங்கீற்றுகளின் தேவை என்பது குறைந்து, இருக்கின்ற தென்னங்கீற்றுகளைக் கூட விற்பனை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சுபநிகழ்ச்சியானாலும், துக்க நிகழ்வானாலும் பந்தலுக்குப் பதிலாக ஷாமியானா பயன்படுத்தப்படுவதும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக வெளியூர்களுக்கு தென்னங்கீற்றுகளை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த காலம் போய் உள்ளூரிலேயே யாரும் கீற்றுகளை வாங்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், முன்பெல்லாம் கோழிப்பண்ணைகளின் கூரைக்கு தென்னங்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பெரும்பாலான கோழிப்பண்ணைகள் மூடப்பட்டு வருவதால் தென்னங்கீற்றுகளின் தேவையும் குறைந்துள்ளது.
கால மாற்றத்தால் தென்னங்கீற்றுகளைத் தயாரிக்கும் தொழில் முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இதே நிலை நீடித்தால் தாங்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகும் என்று இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா