Color Socrling

தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9941681652e-mail : info@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9941681652 e-mail : info@thagavalthalam.com

சாயப்பட்டறைகளா மரணப்பட்டறைகளா?கவனிக்குமா அரசு?"நீரெல்லாம் மாசாச்சு...
இப்போ நோயெல்லாம் வந்தாச்சு...
தோலெல்லாம் சொரியாச்சு...
மருந்து எல்லாம் பொய்யாச்சு...
இதுவே தினம் வாடிக்கையாச்சு !"

      சாயப்பட்டறை கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் கவிஞன் ஒருவனின் இந்த வார்த்தைகள்தான் நினைவில் வந்து நிற்கிறது.
    ஈரோட்டில் உள்ள பல சாயப்பட்டறைகளும், தோல் தொழிற்சாலைகளும் மக்களுக்கு கொடையாகக் கொடுத்திருக்கும் துயரங்களின் பட்டியல் மிக நீளமானது.
    கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் வெள்ளிங்கிரி, பூண்டி மலைகளில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து கரூர் மாவட்டம் நொய்யல் கிராமத்தில் காவிரியில் கலக்கிறது நொய்யல் ஆறு. சங்ககாலத்தில் "காஞ்சிமா நதி" என்று அழைக்கப்பட்ட அந்த புராதன நதி, இன்று சாயக்கழிவால், தோல் பதனிடும் தொழிலால் நஞ்சை சுமக்கும் நதியாகிவிட்டது.
   "விளைநிலங்கள் கெட்டுவிட்டன. விவசாயம் வீணாகிப்போனது. அருமருந்தான தண்ணீரோ ஆலகால விஷமாகிவிட்டது..காற்றும் நஞ்சாகிவிட்டது..." இது தான் இப்பகுதி மக்களின் அங்கலாய்ப்பு.
யாரை குறை சொலவ்து...? ஒருபுறம் சாயப்பட்டறைகள், மறுபுறம் தோல்பதனிடும் ஆலைகள் என இரு பக்கங்களிலிருந்தும் சீர்கேடுகள் ஊற்றெடுக்க, வெள்ளாமை கெட்டு, வருமானம் போய், உடல் வலுவையும் பறிகொடுத்து பரிதவித்து நிற்கிறார்கள் பாவப்பட்ட ஜனங்கள்.
   1941 ஆம் ஆண்டு திருப்பூர் பகுதியில் வெறும் இரண்டே இரண்டு சாயப்பட்டறைகள் இருந்தன. 1986-ல் 99 பட்டறைகளாக மாறின.
   பின்னர் 1989-ல் 450 ஆகவும், 2001-ல் 800 சாயப்பட்டறைகளாகவும் அசுர வளர்ச்சி அடைந்தன. 1970-களில் சாதாரண பனியன், உள்ளாடை தயாரிக்கும் மையமாக இருந்த திருப்பூர், 80களில் பனியன் ஏற்றுமதி மையமாக மாறியது. கூடவே சுற்றுச்சூழலும் சீர்கெட ஆரம்பித்தது.
   1990 ஆம் ஆண்டு முதல் 97 ஆம் ஆண்டு வரை இப்பகுதியில் கிணத்தடி நீரை பயன்படுத்திய விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் பலருக்கு சுவாசம், குடல், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டன. பல ஆண்கள் மலட்டுத்தன்மையடைந்தார்கள். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு, கருத்தரித்தலில் பிரச்சினைகள் ஏற்பட்டன. இன்றும் அந்த அவலம் தொடர்கிறது.
   ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பிரதான கால்வாயான இந்த காலிங்கராயன் கால்வாயையே நம்பி இருந்தனர். ஆனால் இந்த கால்வாயில் 500-க்கும் மேற்பட்ட சாயபட்டறை ஆலைகளின் கழிவுகளையும் 40- க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலை கழிவுகளையும் கலந்ததால் இன்று இது முற்றிலும் மாசுபட்டு நீரை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
கடமை தவறியது யார்?: அரசியல் சாசனப் பிரிவுகள் 47, 48-ஏ, 51-ஏ(ஜி) ஆகியவற்றின்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். அத்துடன் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி மாசில்லாத சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது தனிமனிதர்களின் உரிமை என்று அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. ஆனால் கொங்கு பகுதி குடிமக்களின் உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
   2009-2010 ஆண்டில் நாட்டில் மிகவும் மாசு பட்ட பகுதியாக கொங்கு பகுதியை அறிவித்தது இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். அதை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் ஏகத்துக்கு அதிகரித்திருக்கிறது. ஈரோடு நகரில் மட்டுமே இரண்டு புற்று நோய் மருத்துவமனைகள் எட்டிப்பார்த்திருக்கிறது.மற்ற மருத்துவ மனைகளின் எண்ணிக்கை குறித்து சொல்லவேண்டியதில்லை!
     நம் நாட்டின் தேவைக்காக ஜவுளி மற்றும் பனியன் ஆடைகள் தயாரிக்கப்பட்ட காலங்களில் பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்துவங்கிய போதுதான் கூடவே வேதனைகளும் வந்து சேர்ந்தது. ’சொந்த மக்களின் சுகாதாரத்தைப் பேண வேண்டும். மலிவான விலையில் மற்ற நாடுகளிலிருந்து பின்னலாடை ஆடைகளை வாங்க வேண்டும்’ என திட்டமிட்ட மேற்கத்திய நாடுகள் வளராத நாடுகளான பங்களாதேஷ், இந்தோனேஷியா மற்றும் வளரும் நாடுகளான இந்தியா போன்ற நாடுகளை குறிவைத்து கால் வைத்தன. நாமும் நம் கண்ணை விற்று மேலை நாடுகளுக்கு சித்திரம் வரைந்து கொடுக்கும் நிலைக்கு வந்து சேர்ந்தோம்.
காப்பான் பெருசா கள்ளன் பெருசா என்றால் கள்ளன்தான் பெருசு என்பார்கள்… இங்கேயும் அதுதான் நடக்கிறது. சாயக் கழிவுகளையோ தோல் கழிவு நீரையோ சுத்திகரிக்காமல் வெளியேற்றக்கூடாது என்று நீதிமன்றங்கள் எவ்வளவுதான் தடைகளைப் போட்டாலும், வேறு வழிகளில் அதை மீறுகிறார்கள். ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து அந்த குழிகளுக்குள் கழிவுகளை இறக்கி விடுகிறார்கள். அந்த கழிவு நீர் இப்போது நிலத்தடி நீரை யும் நஞ்சாக்கி வருகிறது.
ஒருபக்கம் விவசாயிகளின் குமுறல், இன்னொரு பக்கம் பொதுமக்களின் உயிர் பயம். இரண்டுக்கும் இடையில் செப்படிக்காரன் போல் நழுவிக்கொண்டே தன் ஆதாயத்தை நிரப்ப மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாறி மாறி வரும் அரசாங்கங்களும் கண்ணாமூச்சி காட்டிகொண்டிருக்கின்றன.

    காலிங்கராயன் கால்வாயை நம்பி வாழும் இந்தப் பகுதி மக்களின் வாழ்வையும் சுற்றுச் சூழலையையும் பாதுக்காக்க வேண்டியது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம்தான். ஆனால், அந்த வாரியமும், கட்சித் தலைவர்களும், சாயப்பட்டறை ஆலைகளின் முதலாளிகளும், மாறி மாறி அதிகாரத்துக்கு வரும் அரசாங்கங்களும் அலட்சியமாகவே இருக்கிறார்கள். இந்த மக்களின் நிரந்தரமான தீர்வை நோக்கி ஒரு அடிகூட வைக்காமல் அசட்டையாக அலட்சியமாக இருக்கிறார்கள்..
   கொங்கு மக்களின் துயர வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேர்மையாக, மனசாட்சியோடு செயல்படும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளில் பலர் அடிக்கடி பணிமாற்றம் செய்யப்படுகிறார்கள். இதற்கான பின்னணியை புரிந்துகொண்டு அல்லது மரத்துப்போன மனங்களோடு ஏராளமான அதிகாரிகள் இதே வாரியத்தில்தான் வலம் வருகிறார்கள். இதை பார்க்கும்போது அந்த மக்களின் துயரம் இன்னும் கானல் நீராக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
    கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேல் விவசாய சங்கங்களும், தொழிற்சாலை சங்கங்களும் சமூக ஆர்வலர்களும் போராடி போராடி வெறுத்துப் போயிருக்கிறார்கள். வாக்கு வங்கியை மட்டுமே மனதில்வைத்து வாய்ஜாலம் செய்யும் அரசியல்வாதிகளோ கடந்த 20 ஆண்டுகளாக சாய, தோல் கழிவுநீர் பிரச்னையை தீவிரமாக தீர்க்கத் தயாராக இல்லை. தேர்தல் காலத்தில் ஒரு முகமூடி, பதவியை பெற்றதும் வேறு முகமூடி என அவர்களது நாடகங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
    1996 ஆம் ஆண்டு கரூர் விவசாயிகள் சங்கம், திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதையடுத்து 2002ல் சூழலியல் இழப்பீடு ஆணையம் 68 கிராமங்களைச் சேர்ந்த 28,596 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சாயப்பட்டறை உரிமையாளர்கள் வழக்குப் போட, அதை எதிர்த்து எதிர் வழக்கு போட ,கழிவுநீர் போராட்டம் இன்றும் முடிவுக்கு வரமுடியாத போராட்டமாகவே நீள்கிறது.
   அருகிப் போகும் தொழில், கேட்பாரற்ற விளை நிலங்கள், சுகாதாரத்தை இழக்கும் மக்கள் என சிக்கல் சங்கிலிகளின் பிடிகள் மேலும் மேலும் இறுகிக்கொண்டே போகிறது.நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல சுற்றுச் சூழல் என்பதை வலியுறுத்தித்தான் இந்தப் பகுதி மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த எதிர்ப்புக் குரல் முணுமுணுப்பாக இருந்தது; பின்னர் கோபக் குரலாக மாறியது; அதன்பிறகு விரக்தி குரலாக வெடித்தது.
   இப்போது இந்தக் குரல்களின் அபிலாஷைகளை மாற்றி அவர்களுக்கு சுகாதாரமான வாழ்க்கை உருவாக்க பொறுப்பான அரசாங்கங்கள் முன் வரவேண்டும். 
     இல்லையென்றால், வெறும் புகையைக் கக்கும் இந்த கோப எரிமலை நிச்சயம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம். அதற்குள் அதைத் தணிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.
    -இணைய செய்தியாளர்-தேனி ராஜா