தனி ஒரு மனிதராக போராடி பல லட்சம் மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கி, பல லட்சம் ஏக்கரில் பரந்து விரிந்து ஆனால் பயன்பாடற்று இருந்த நிலங்களை இன்று மூன்று போகமும் காணும் விளை நிலங்களாக மாற்றியது என போற்றுதற்குரிய சாதனை செய்தார் பென்னி குவிக்.
ஜான் பென்னி குக் இங்கிலாந்தைச் சேர்ந்தப் பொறியாளர் இவர். இவர் தான் முல்லை பெரியாறு அணையை கட்டினார். மிக எளிதாக அமையவில்லை இந்தப் பணி... அரும்பாடு பட்டு அவர் கட்டிய இந்த அணை தான் இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின், பாசனம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது.
இன்று (ஜன.15) இவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. எங்கோ பிறந்து, இங்கு வந்து இத்தகைய சமூக அக்கறையுடன், தொலைநோக்குடன் வியத்தகு சாதனை படைத்தவரை மறக்க முடியுமா?
பென்னி குவிக், 1841 ஜன.,15ல் லண்டனில் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியாளர் பட்டம் பெற்றார்.
நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார்.
முல்லை மற்றும் பெரியாறை இணைத்து, அணை கட்ட ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது.
அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.
இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.
சொத்துக்களை விற்று அணையை கட்டி முடித்தார் பென்னி குவிக் சொந்த நாட்டு மக்களுக்காக அல்ல.... ஆங்கிலேயர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த ஒரு காலனி நாட்டிற்காக.
தேனி லோயர் கேம்ப் ஜீவா