தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட உள்ள 2 தாலுகா அலுவலகங்களுக்கு பணியிடங்களை நிரப்பவும் மற்றும் புதிய கோட்ட அலுவலகம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்படும் கலசப்பாக்கம் வட்டத்தில் 19 பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது. அலுவலக தொடர் செலவினத்திற்காக ஒரு கோடியே 35 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தேவையான தளவாடங்கள் வாங்குவதற்கு அரசுக்கு 2 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதேபோல திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக மடத்துக்குளம் வட்டம் உருவாக்கப்படுகிறது. அந்த வட்டாச்சியர் அலுவலத்திற்கு புதியதாக 4 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது.
இந்த அலுவலத்திற்கு தொடர் செலவினமாக ஆண்டுக்கு 9 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவாகும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் உடுமலைப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டத்திற்கு புதிய அலுவலகம் கட்டுவதற்காக ஒரு கோடியே 85 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-மாவட்ட செய்தியாளர் - தேனி ராஜா